சென்னையில் 4 வயது சிறுவனுக்கு சிறு குடல் மாற்று சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் ஆசிய அளவில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. சிறுவனுக்கு தேவைப்பட்ட சிறு குடலை அவரது தந்தை தானமாக கொடுத்துள்ளார். இருவரும் தற்போது நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 7 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. எட்டு மருத்துவர்கள் மற்றும் 24 செவிலியர்கள் கூட்டாக சேர்ந்து இந்த அறுவை சிகிச்சை பணிகளை மேற்கொண்டுள்ளனர். 150 சென்டிமீட்டர் நீளம் கொண்ட சிறுவனின் தந்தையின் சிறு குடலின் ஒரு பகுதி அறுவை சிகிச்சை மூலம் நீக்கிய மருத்துவர்கள், அதனை சிறுவனுக்கு மாற்றி உள்ளனர்.
பெங்களூருவில் வசிக்கும் தம்பதியினரின் 4 வயது மகனுக்கு சிறு குடல் முறுக்கம் (Volvulus) என்ற அரிதான ஆரோக்கிய சிக்கல் கண்டறியப்பட்டுள்ளது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறு குடல் மாற்றம் செய்வதே இதற்கு தீர்வு என சொல்லி உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சைக்கு பின்னர் சிறுவனின் உடல் செயல்பாட்டை கவனித்து வந்த மருத்துவர்கள் அவர் வழக்கமான குழந்தைகளை போல உணவு எடுத்துக் கொண்டு வருவதை உறுதி செய்து கொண்டு தற்போது இந்த விவரங்களை தெரிவித்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சை மருத்துவர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் முகமது ரேலா தலைமையில் நடைபெற்றுள்ளது. இதன் மூலம் சிறுவனுக்கு மறு வாழ்வு கிடைத்துள்ளது.