நாடெங்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.
தற்போது தினசரி கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 17 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனா முதல் அலையில் அதாவது 2020ஆம் ஆண்டில் தினசரி தொற்றுகள் 10000லிருந்து ஒரு லட்சத்து பத்தாயிரத்தை தொட 98 நாட்கள் ஆன நிலையில், 2ஆவது அலையில் இதற்கு 63 நாட்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் தற்போது வெறும் பத்தே நாட்களில் நாடெங்கும் தினசரி கொரோனா தொற்றுகள் 10 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சத்து 10 ஆயிரத்தை கடந்துள்ளன.
கடந்த டிசம்பர் 28ஆம் தேதி தினசரி தொற்றுகள் சுமார் 7 ஆயிரமாக மட்டுமே இருந்த நிலையில் ஜனவரி 7ஆம் தேதி அது ஒரு லட்சத்து 17 ஆயிரத்தை கடந்துள்ளது. தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், டெல்லி, கேரளா, தமிழகம் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. எனினும் ஆறுதல் தரும் விதமாக இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து கட்டுக்குள்ளேயே இருப்பது குறிப்பிடத்தக்கது