புதுச்சேரி : 'முதல்வர் தனது அதிகாரத்தை கவர்னரிடம் கொடுத்து விட்டு வேடிக்கை பார்க்க கூடாது' என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.அவர் கூறியதாவது;மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில், பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, சமூக நீதியை காப்பாற்றி உள்ளது.
கொரோனா பரவல் அதிகரிக்கும் என்பதால், புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தை தவிர்க்க கூறினேன். ஆனால் அனுமதி அளிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில், புத்தாண்டு விழா கொண்டாட்டத்தில், மதுபானம் விற்பனை செய்தால் தான் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும் என கூறிய பதில், மாநிலத்திற்கு மிகப்பெரிய இழுக்கு.எதிர்பார்த்ததுபோல், கொரோனா அதிகரித்துள்ளது. இதற்கு கவர்னர், முதல்வர் பொறுப்பேற்க வேண்டும். பேரிடர் மீட்பு துறை தலைவர் முதல்வர்.
ஆனால், அந்த பதவியில் கவர்னர் அமர்ந்து கொண்டு, கட்டுப்பாடுகளை அறிவிப்பது ஏற்று கொள்ள முடியாது.கவர்னரிடம் முதல்வர் ஆலோசனை கேட்கலாம். ஆனால், முடிவு எடுக்கும் பொறுப்பு முதல்வருக்கு தான் உண்டு. அரசு தினசரி செயல்களில் கவர்னர் தலையிட உரிமை கிடையாது.கொலை, கொள்ளை, ரவுடிகள் அட்டகாசம் தாங்க முடியவில்லை. கஞ்சா தாராளமாக விற்கப்படுகிறது. சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவில்லை.
வில்லியனுாரில் நேற்று ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார். ரவுடிகள் அட்டகாசம் குறித்து முதல்வர் கவலைபடவில்லை. கடந்த 6 மாதத்தில் நுாற்றுக்கணக்கான கொலை நடந்துள்ளது. இவற்றை தடுக்க முதல்வர் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும். கவர்னரிடம் அதிகாரத்தை கொடுத்து விட்டு வேடிக்கை பார்க்க கூடாது, என, கூறினார்.
Advertisement