ஆயிரம் சந்தேகங்கள்: கப்பலில் பணிபுரிபவர்கள் வருமான வரி கட்ட வேண்டுமா?

2 years ago 793

மைக்ரோ ஏ.டி.எம்., என்றால் என்ன? அந்த வசதியைபயன்படுத்துவது எப்படி?
ரோ.சு.சத்தியமூர்த்தி, திருத்தணி.
கடைகளில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுக்குப் பயன்படும் ‘பாயின்ட் ஆப் சேல்’ சாதனம் போல் தான் மைக்ரோ ஏ.டி.எம்., இருக்கும். இந்த சாதனம் உங்கள் ஆதாரோடு இணைக்கப்பட்டு வேலை செய்யும். இதில் நேரடியாக பணத்தை போடவோ, எடுக்கவோ முடியாது. இதனோடு வங்கி முகவர் வருவார்.அவரிடம் பணத்தைக் கொடுப்பதோ, பெறுவதோ நடைபெறும். வீட்டு வாசலில் வங்கிச் சேவை என்ற வகையில் பல வங்கிகள், இந்த வசதியைத் தருகின்றன. உங்கள் வங்கியில் இத்தகைய சேவை இருக்கிறதா என்று கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள்.
நான் தனியார் கப்பலில் பணியாற்றுகிறேன். நான் வரி கட்ட வேண்டுமா? ஏன்? நான் என்.ஆர்.ஐ., தானே? என் பெயரில் இந்தியாவில் எந்த விதமான சொத்தும், வருமானமும் இல்லை, அனைத்தும் என் பெற்றோர்களின் பெயரில் உள்ளன. இதற்காக என் பெற்றோர் வரி கட்ட வேண்டுமா?

ஆ.பாரதிராஜா, பழநி.
கப்பலில் பணியாற்றுவதாலேயே நீங்கள் வரி செலுத்தத் தேவையில்லை என்று கருதவேண்டாம். பின்வரும் விளக்கத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்: ஒரு நிதியாண்டில், நீங்கள் 183 நாட்களுக்கு மேல், கப்பலில் இருந்தால், நீங்கள் ‘நான் -ரெசிடண்ட்’ கடற்பயணியாகக் கருதப்படுவீர்கள்.அதனால், இந்தியாவில் வருமான வரி கட்ட வேண்டாம். ஆனால், 183 நாட்களுக்கு குறைவாக கப்பலில் இருந்தால், நீங்கள் இந்தியாவுக்குள் இருப்பதாக கருதப்படும்; வரி செலுத்த வேண்டும்.

ஆனால், 2020- – 21 நிதியாண்டு முதல், ஒருவர் 119 நாட்களுக்கு மேல் இந்தியாவில் தங்கியிருந்து, அவரது வரி வருவாய் 15 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்குமானால், அவர் இந்தியாவில் வசிப்பவராகவே கருதப்படுவார் என்று புதிய வரிப் பிரிவு 6(1ஏ) தெரிவிக்கிறது. மேலும், வருமான வரிச் சட்டம் 5 (2)(ஏ) படி, ஒருவரது வருவாய் இந்தியாவில் பெறப்பட்டாலே, அதற்கு வருமான வரி பொருந்தும் என்று கடந்த ஆண்டு, கொல்கத்தா வரித் தீர்ப்பாயம் ஒன்று தெரிவித்துள்ளது. நீங்கள் உங்கள் பெற்றோருக்குத் தரும் பணம், ‘பரிசாக’ கருதப்படும். அதற்கு அவர்கள் ஏதும் வரி செலுத்த வேண்டாம்.
நடப்பு ஆண்டில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாமா?
ஆர். மனோகரன், சேலம்.
உங்களுக்குப் போதிய அனுபவமும், தைரியமும், நேரமும் இருந்தால், தாராளமாக பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். ஆனால், இந்தக் கொரோனா காலத்தில் வேறொரு முதலீட்டு வாய்ப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது. தங்க ‘எக்ஸ்சேஜ் டிரேடட் பண்டு’ பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதேபோல், பங்குச் சந்தை இ.டி.எப்., கடன் பத்திர இ.டி.எப்.,கள் உள்ளன. 42 துறைசார் குறியீடுகளை அடிப்படையாக கொண்ட 108 இ.டி.எப்.,கள் உள்ளன. இதில் 82 பங்குச் சந்தை சார்ந்த இ.டி.எப்., 15 கடன்பத்திர இ.டி.எப்., 11 தங்க இ.டி.எப்.,கள் உள்ளன.

கடந்த ஓராண்டில், பங்குச் சந்தை இ.டி.எப்.,களில் மிகப் பெரிய முதலீடு வந்திருக்கிறது. அதாவது, பல்வேறு துறை சார்ந்த குறியீடுகளில் உள்ள பங்குகளின் விகிதத்துக்கு ஏற்ப முதலீடு செய்யும் இ.டி.எப்.,கள் இவை. இவற்றை பங்குச் சந்தையில் வாங்கவும், விற்கவும் முடியும் என்பதால், இந்த வாய்ப்பை, பெரும்பாலோர் பயன்படுத்தி, லாபம் ஈட்டியுள்ளனர். இதுவும் மியூச்சுவல் பண்டு மாதிரியான முதலீடு தான். ரிஸ்க் கொஞ்சம் குறைவு, செலவும் குறைவு.
நான் 25 ஆண்டுகளாக கணக்கு வைத்திருக்கும் வங்கியில், என்பிறந்த நாள் திடீரென மாறியது. என் ஆதார் எண் வங்கிக் கணக்கில் இருந்தே காணாததால், எனக்கு காஸ் மானியம் வருவதில்லை. ஏன் இந்த குளறுபடிகள்?
ராதாகிருஷ்ணன், வாட்ஸ் ஆப்.
பொதுவாக, உங்கள் பிறந்த தேதி, ஆதார் போன்ற விபரங்கள் மாறுவதற்கு வாய்ப்பில்லை. நீங்களாக ஏதேனும் திருத்தம் அல்லது மாறுதல் கொடுத்திருந்தால் மட்டுமே இவை மாறும். ஆனால், உங்கள் அனுமதி இல்லாமல் இவை மாற்றப்பட்டன என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமானால், உங்கள் வங்கியில் எழுத்துவடிவில் நேரடி புகார் கொடுங்கள்.விளக்கம் கேளுங்கள். உரிய பதில் கிடைக்கும் வரை விடாதீர்கள்.
நீங்கள் சண்டைக்காரர் என்று பெயரெடுக்கலாம், ஆனால், சேவைக் குறைப்பாட்டைச் சுட்டிக்காட்டுவதற்கு வாடிக்கையாளரான நமக்கு முழு உரிமை உண்டு. அப்படியும் உங்களுக்குத் தீர்வு கிடைக்கவில்லை என்றால், இங்கே புகார் அளிக்கவும்: https://cms.rbi.org.in/

எனக்கு 2 ஆண்டுகளாக வேலை இல்லை. இப்போது தான் வேலையில் சேர்ந்துள்ளேன். பைக் வாங்க லோன் தேவை. 2 ஆண்டு வருமான வரி ரிட்டர்ன் கேட்கின்றனர். நில் ரிட்டர்ன் தாக்கல் செய்தால், பைக் லோன் கிடைக்குமா? வேலை இல்லாததால், லோன் இ.எம்.ஐ., சரியான தேதியில் கட்ட முடியாமல் என் சிபில் ஸ்கோர் குறைந்து விட்டது. அதை மறுபடியும் எப்படி உயர்த்த முடியும்?
ஆர்.மணிகண்டன், இ – மெயில்.
இரண்டு ஆண்டுகள் வேலைஇல்லை, கடன் தவணையை சரியான தேதியில் செலுத்த வில்லை, சிபில் ஸ்கோர் குறைந்துவிட்டது என்பதெல்லாம், புதிய கடன் பெறுவதற்கு பெரிய தடைகள். வேலையே இல்லை எனில், ‘நில் ரிட்டர்ன்’ என்பது உங்களுடைய வருவாயின்மையின் சான்றாகவே பார்க்கப்படும். உங்களுக்கு இரண்டு வழிகள் உள்ளன.

வங்கியல்லாத நிதி நிறுவனங்களிடம் வாகன கடன் கேட்கலாம். தருவார்கள். வட்டி மிக அதிகம். அல்லது, அடுத்த ஓராண்டுக்கு, ஏற்கனவே இருக்கும் கடனை முறையாகச் செலுத்தி, படிப்படியாக உங்கள் சிபில் ஸ்கோரை உயர்த்திக்கொண்டு, அதன் பின்னர் புதிய லோன் கோரலாம்.
நாமினியின் அவசியத்தை கூறுகிறீர்கள், சரி. வங்கியில் நகைக் கடன் வாங்கும்போது நாமினி கேட்பது இல்லை. இதனால் நகையை திருப்பித் தருவதில் வீண் அலைகழிப்பு இருக்கிறதே? அதேபோல், வாரிசு சான்று பெறுவதற்கு அலைய வேண்டியதை தடுக்க, ஒருவர் உயிருடன் இருக்கும் போதே, தனக்கு பிடிக்காத வாரிசை உயில் வாயிலாக விலக்கி வைக்கலாமே?
து.இளங்கோவன், திண்டுக்கல்.
நகைக்கடன் விஷயத்தில் நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. நடைமுறைப்படுத்தலாம். ஆனால், இரண்டாவதில் ஒரு சின்ன திருத்தம். அது என்ன ‘பிடிக்காத வாரிசு?’ இந்தப் பாகுபாட்டில் துளியும் அர்த்தமில்லை. முறையாக பாகப்பிரிவினை செய்யப்படவில்லை என்று எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன தெரியுமா? இந்தப் பாகுபாட்டினால், வாரிசுகள் மத்தியில் தீராத விரோதமும், ஆறாத வடுவும் ஏற்பட்டு விடுகின்றன.கப்பலில் பணிபுரிபவர்கள் வருமான வரி கட்டவேண்டுமா?
வாச­கர்­களே, நிதி சம்­பந்­தப்­பட்ட உங்­கள் கேள்­வி­களை, ‘இ--–மெயில்’ மற்­றும் ‘வாட்ஸ் ஆப்’ வாயி­லாக அனுப்­ப­லாம்.

ஆயி­ரம் சந்­தே­கங்­கள்
தின­ம­லர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை – 600 014 என்ற நம் அலு­வ­லக முக­வ­ரிக்கு அஞ்­சல் வாயி­லா­க­வும் அனுப்­ப­லாம். கேள்­வி­க­ளைச் சுருக்­க­மாக தமி­ழில் கேட்­க­வும்.

ஆர்.வெங்­க­டேஷ்,

[email protected] 98410 53881

Read Entire Article