ஷிவமொகா:கஞ்சா பிரச்னையால் ஷிவமொகா மக்கள் பரிதவிக்கின்றனர். இதற்கு கடிவாளம் போடும்படி, தொடர்ந்து போராட்டம் நடக்கிறது.
கஞ்சா விற்பவர் மட்டுமின்றி, பயன்படுத்துவோர் மீதும் நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஷிவமொகாவின் ஒவ்வொரு கிராமத்திலும் கஞ்சா விற்பனையாகிறது. கல்லுாரி மாணவர்களுக்கு எளிதில் கிடைக்கிறது. கஞ்சா போதையில் நடந்த குற்றங்களுக்கு அளவே இல்லை. சில முறை போலீசார் மீதும் தாக்குதல் நடந்துள்ளது.
கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்தும்படி மக்கள், சமூக அமைப்பினர் பல முறை போராட்டம் நடத்தியுள்ளனர். தற்போது ஷிவமொகா போலீசார், அவ்வப்போது சோதனை நடத்தி, கிலோ கணக்கில் கஞ்சாவை கைப்பற்றுகின்றனர். சில முறை கிராம் கணக்கிலும் பிடிபடுகிறது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும், சில நாட்களில் ஜாமினில் வெளியே வந்து, பழையபடி கஞ்சா விற்பனையில் ஈடுபடுகின்றனர்.
இதனால் போலீசாரின் நடவடிக்கை, சோதனை பயனளிப்பதில்லை.இளம் தலைமுறையினரை பாழாக்கும் கஞ்சாவை ஒழிக்க, ஷிவமொகா போலீசார் மாற்று வழியை கண்டுப்பிடித்துள்ளனர். இதுவரை கஞ்சா விற்பவர்களை மட்டுமே போலீசார் கைது செய்தனர். இனிமேல் இதை பயன்படுத்துவோருக்கு, 'ஷாக்' அளிக்க முன் வந்துள்ளனர்.திப்பு நகர், கோபாளா உட்பட பல்வேறு இடங்களில் கஞ்சா போதையில் நடமாடுவோரை கண்டுபிடித்து, போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து பரிசோதனை செய்தனர்.கஞ்சா உட்கொண்டது உறுதியானதால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
இதனால் கஞ்சா பயன்படுத்துவோருக்கு, நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஷிவமொகா மாவட்ட போலீஸ் எஸ்.பி., லட்சுமி பிரசாத் கூறியதாவது:சிலர் கஞ்சா போதையில் சாலைகளில் நடமாடுகின்றனர். இவர்களுக்கு பாடம் புகட்டும் நோக்கில், ஷிவமொகாவின் மெக்கான் மருத்துமனையில், 'டெஸ்டிங் கிட்' வரவழைக்கப்பட்டுள்ளது.
கஞ்சா உட்கொண்டனரா, இல்லையா என்பதை இதன் மூலம் கண்டுபிடிக்கலாம். கஞ்சா போதையில் உள்ளவர்களை, அடையாளம் காண்பது, போலீசாருக்கு கஷ்டமில்லை. ஆனால் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் சாட்சிகளை தாக்கல் செய்ய, பரிசோதனை நடத்த வேண்டியுள்ளது.இதற்காகவே போதைப்பொருள் 'டெஸ்டிங் கிட்' வரவழைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு போதைப்பொருட்கள் குறித்தும் பரிசோதிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement