சென்னை-'சாலை விபத்துகளில் பொன்னான நேரமான முதல் 60 நிமிடங்கள் உயிர் பிழைக்க மிக முக்கியமானது' என சென்னை மியாட் மருத்துவமனையின் டிராமா இயக்குனர் டாக்டர் ராம்பிரசாத் தெரிவித்தார்.சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு தடுப்பு குறித்து அவர் கூறியதாவது:உலகளவில் 199 நாடுகளில் நடந்த சாலை விபத்துகளை ஒப்பிடும்போது, இந்தியா முதலிடத்தில் உள்ளது. சீனா இரண்டாம் இடம், அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளன.உலகளாவிய சாலை விபத்து மரணத்தில் இந்தியாவின் பங்களிப்பு 11 சதவீதம். இது, உலக சராசரியான 8 சதவீதத்தை விட அதிகமாகும்.இந்தியாவில் சாலை விபத்துகளில் இறப்பு விகிதம், தமிழ்நாடு, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் அதிகமாக உள்ளது.தமிழக அரசின் புள்ளி விபரங்களின்படி, 2020ம் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 4 ஆயிரம் சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. சாலை விபத்தில் சென்னை, கடலுார், கோயம்புத்துார் மாவட்டங்கள் முதல் மூன்று இடத்தில் உள்ளன.சாலை விபத்து இறப்புகளில் பெரும்பாலானவை இரு சக்கர வாகனங்கள் மூலம் நடக்கின்றது.இந்தியாவில் 15 -39 வரை வயதுள்ள ஆண்களின் மரணத்திற்கு இது முக்கிய காரணமாக உள்ளது. சாலை விபத்துகளில் பாதசாரிகள், பைக், சைக்கிள் மற்றும் கார் ஓட்டுபவர்கள், பயணிகள் காயங்களுக்கு அதிகம் ஆளாக நேரிடுகிறது.மொத்த சாலை விபத்து இறப்புகளில் இரு சக்கர வாகனத்தின் பங்களிப்பு 35 சதவீதமாக உள்ளது. கார்கள், டாக்சிகள், வேன்கள்-18.6 , பாதசாரிகள் -14, டிரக்குகள்-10.7, பஸ்கள்-4.9 சதவீதமாக உள்ளன.சாலை விபத்துகளின்போது, முதல் 60 நிமிடங்கள் மிக முக்கியமானது. இது, 'பொன்னான நேரம்' என்று அழைக்கப்படுகிறது.சாலை விபத்தில் காயமடைந்தவர்கள் உயிர் பிழைக்க 60 நிமிடங்களுக்குள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய முக்கியம். துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் இது குறித்த விழிப்புணர்வு, சரியான மீட்பு வசதிகள் இல்லை. இதனால் சாலை விபத்தில் சிக்கியவர்கள் இந்த பொன்னான நேரத்திற்குள் மருத்துவமனையை அடைய முடிவதில்லை.சாலை விபத்தில் சிக்கியவர்கள் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவை அடைந்த பின், உயிருக்கு ஆபத்தான காயங்களை கண்டறிய வேண்டும். அடுத்து அதிர்ச்சி, தீவிரமான காயங்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். இவை இரண்டும் ஒன்றாக செய்யப்பட வேண்டும்.இது உயிர் வாழ்வதற்கு தேவையான பொன்னான நேரத்தில் மதிப்புமிக்க தருணங்களை இழப்பதை தவிர்க்கிறது.சாலை விபத்தில் மூளையில் ஏற்படும் காயம், 50 சதவீத இறப்பிற்கு காரணமாக அமைகிறது. ரத்தப்போக்கு மற்றும் அதிர்ச்சியில் 35 சதவீத மரணம் ஏற்படுகிறது இதயத்துடிப்பு 120க்கு மேலும், ரத்த அழுத்தம் 80க்கும் கீழும் மயக்க மற்றும் நிலையற்ற முறையில் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.வயிறு, மார்பு காயங்கள் ஏற்பட்டால், குறிப்பாக உட்புற ரத்தப்போக்கு இருந்தால் நீண்டகால ஹைபோவோலெமிக் அதிர்ச்சியில் இருந்து காக்க உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும். விபத்து காயங்களை சரியான முறையில், விரைவாக சரி செய்யாவிட்டால் சிக்கல் ஏற்படும்.இது போன்ற தீவிர விபத்து காயங்களை கொண்டவர்களை முடிந்த அளவு டிராமா ரீசச்சிடேஷன் மையம் அல்லது டெர்ஷியரி கேர் டிராமா ரெபரல் மையத்திற்கு மாற்றப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.உயிர்களை காக்கும் உன்னத பணிசென்னை மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் பிருத்வி மோகன்தாஸ், கூறியதாவது:சாலை விபத்தில் சிக்கியவர்களை சரியான நேரத்தில் சரியான மருத்துவமனைக்கு கொண்டு சென்றால், உயிர் பிழைக்கவும் விரைவில் குணமடையவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.விபத்தில் தலை, கை, கால்கள், உடல் உறுப்புகள் என அனைத்துமே சேதமாகி இருக்கும். எனவே ஒருங்கிணைந்த டிராமா சிகிச்சை மருத்துவமனை அவசியம். இந்த வசதிகளை மியாட் மருத்துவமனை கொண்டுள்ளது.கடந்த 40 ஆண்டுகளாக சிறந்த பாலி டிராமா மருத்துவமனையாக மியாட் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலை விபத்துகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. 24 மணி நேரமும் மருத்துவர்கள், துணை மருத்துவர்கள், செவிலியர்கள் சாலை விபத்து உயிரிழப்பு தடுப்பு பணியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.சாலை விபத்தில் உயிர்களை காப்பாற்றும் வகையில் பொன்னான நேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டு செல்வோருக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கி, மத்திய அரசு குட் சமாரிட்டன்ஸ் திட்டத்தை தொடங்கியுள்ளது. சாலை விபத்துகளில் உயிர்களை காக்கும் உன்னத பணியில் சமூகம் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement