சுதாகரன் நாளை விடுதலை

3 years ago 753

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேருக்கும் நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது; கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.இதில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் ஜனவரியில் விடுதலை செய்யப்பட்டனர். அபராத தொகை செலுத்தாததால், சுதாகரன் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அவரது தண்டனை காலம், 2022, பிப்., மாதத்துடன் நிறைவடைய உள்ளது. ஆனால், ஏற்கனவே 2007ல் ஓராண்டு சிறையில் இருந்த காரணத்தால், நாளை காலை அவர் விடுதலை செய்யப்படுகிறார்.

'லுக் அவுட் நோட்டீஸ்'

புனே: மஹாராஷ்டிராவின் புனேயில் 2018ல் பணமோசடி புகாரில் சிக்கிய கோசாவி என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சமீபத்தில் சொகுசு கப்பலில் போதை பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய சோதனையை நேரில் பார்த்தவரான இவர், ஷாரூக் கானின் மகன் ஆர்யான் கானுடன் 'செல்பி' எடுத்து வெளியிட்ட புகைப்படம், சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில் தலைமறைவாக இருந்து வரும் கோசாவிக்கு எதிராக, 'லுக் அவுட் நோட்டீஸ்' எனப்படும், வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதை முடக்கும் நோட்டீஸ் நேற்று போலீசாரால் பிறப்பிக்கப்பட்டது.

28 அதிகாரிகள் 'சஸ்பெண்ட்'

புதுடில்லி: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் 'யூனிடெக்' குழுமத்தின் முன்னாள் விளம்பரதாரர்களான அஜய் சந்திரா மற்றும் சஞ்சய் சந்திரா ஆகியோர் 2017ல் கைது செய்யப்பட்டனர். டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களுக்கு சிறை அதிகாரிகள் பலரும் உதவி செய்து வந்தது சமீபத்தில் அம்பலமானது. இந்நிலையில் அவர்களுக்கு உதவி செய்த 28 சிறை அதிகாரிகளை, 'சஸ்பெண்ட்' செய்து, நேற்று டில்லி சிறைத் துறை உத்தரவு பிறப்பித்தது.

பண்டிகைக்கு அனுமதி கிடைக்குமா?

புதுடில்லி: வட மாநிலங்களில் சூரிய பகவானை வழிபடுவதற்கு 'சாத்' என்ற பண்டிகை, ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின்போது புனித நதியில் நீராடுவதை மக்கள் வழக்கமாக வைத்துள்ளனர். எனினும் டில்லியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டுக்கான சாத் பண்டிகைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் டில்லியில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளதை சுட்டிக்காட்டி, சாத் பண்டிகைக்கு அனுமதி வழங்கக்கோரி, டில்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜாலுக்கு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று கடிதம் எழுதி உள்ளார்.

Advertisement

Read Entire Article