குடும்ப வறுமை காரணமாக 38 ஆண்டுகளுக்கு முன் குழந்தைகளை, ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்த தாய் தற்போது அவர்கள் எங்கே இருக்கின்றனர் எனத் தேடி அலைந்து வருகிறார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்தவர் காளியம்மாள். 1980 ஆம் ஆண்டில் சிறுமியாக இருந்தபோதே திருமணமாகி 2 குழந்தைகளை பெற்றெடுத்தார். இவரது கணவர் முத்துசாமி விபத்தில் இறந்துவிட, ஒட்டன்சத்திரத்தில் யாசகம் கேட்டு வாழ்க்கையை நகர்த்தி வந்தார் காளியம்மாள்.
1982-ல் ஒரு மருத்துவரின் உதவியுடன் மதுரையில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு தனது 2 குழந்தைகளையும் அனுப்பி வைத்தார், அந்தப்பெண். பின்னர் அம்மருத்துவமனையின் உதவியோடு அந்தப்பிள்ளைகளை ஒரு குழந்தைகள் இல்லத்தில் சேர்த்துள்ளனர். அச்சமயம் காளியம்மாளுக்கு வயது 19 தான்.
அடிக்கடி குழந்தைகளை வந்து பார்க்கக்கூடாது என்று கண்டித்த இல்ல நிர்வாகிகள், காளியம்மாவின் முகவரியை வாங்கிக்கொண்டு திருப்பி அனுப்பிவிட்டனர். ஆனால், ஆண்டுகள் உருண்டோடிவிட்ட பின்னரும் தனது பிள்ளைகளை பார்க்க முடியவில்லை என்று மனம் வெதும்புகிறார். குழந்தைகள் இல்லத்தில் சேர்த்த மருத்துவர் தற்போது உயிருடன் இல்லாததால், அவருடன் வந்த நீலாவதி என்ற பெண் நினைவுக்குவர, அவர் நடத்திவரும் குழந்தைகள் இல்லத்திற்குச் சென்று விவரங்களைக்கூறி உதவுமாறு கேட்டுள்ளார். அவரும் சரியான பதில் கூறாமல் திருப்பி அனுப்பிவிட்டதாக மனம் குமுறுகிறார், காளியம்மாள்.
திருச்சி அருகே ஒரு கல்லூரியில் தூய்மைப்பணியாளராக பணியாற்றி வரும் அந்தப்பெண், தனக்கு கிடைக்கும் வருமானத்தை ஆதரவற்ற குழந்தைகளுக்கு செலவிட்டு வருகிறார். யாருமில்லா குழந்தைகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் காளியம்மாள், தனது பிள்ளைகள் எங்கே இருக்கிறார்கள் எனத்தேடி திருச்சி மாவட்ட ஆட்சியர் முதல் முதலமைச்சர் வரை மனு அனுப்பிவிட்டு நம்பிக்கையோடு காத்திருக்கிறார்.
இதையும் படிக்கலாமே:https://www.puthiyathalaimurai.com/newsview/118836/actor-ajith-valimai-movie-teaser-released-new-year