புதுடில்லி: சொந்த கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் காலி செய்ய மறுப்பதால், ஏற்கனவே தன் தந்தையும், தானும் பல ஆண்டுகளாக வசித்து வந்த பங்களா கிடைக்காமல் மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தவித்து வருகிறார்.
8ம் எண் வகை பங்களாதலைநகர் டில்லியில் ஏராளமான அரசு பங்களாக்கள் உள்ளன. மத்திய அமைச்சர்கள், மூத்த ராஜ்யசபா எம்.பி.,க் கள், நீதித்துறையின் மூத்த பிரபலங்கள் ஆகியோருக்கு மட்டும் 8ம் எண் வகை பங்களாக்கள் ஒதுக்கப்படுவது வழக்கம்.இந்த வகை பங்களாக்கள் மிகுந்த விசாலமான பரப்பளவில் பல்வேறு வசதிகளைக் கொண்டதாக இருக்கும்.
ஆனாலும் பதவியை இழப்பவர்கள் ஒரு மாத காலக் கெடுவுக் குள் இங்கிருந்து காலி செய்ய வேண்டும்.அமைச்சர் பதவியை இழப்பவர்கள் இந்த வகை பங்களாவை காலி செய்து, எம்.பி.,க்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பங்களாவுக்கு செல்ல வேண்டும். உத்தரகண்ட் மாநிலம், ஹரித்துவார் எம்.பி.,யான ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அமைச்சரவையில் அங்கம் வகித்தவர். ஆறு மாதங்களுக்கு முன் நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சர் பதவியை இழந்தார்.
அமைச்சராக இருந்த போது டில்லி ஜப்தர்ஜங் சாலையின் அருகே உள்ள 8ம் எண் வகை பங்களாவில் வசித்து வந்தார். நிராகரிக்கப்பட்டதுஅமைச்சரவை மாற்றத்திற்கு பின் இந்த பங்களாவை காலி செய்து தரும்படி பொக்கிரியாலுக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.
அதேநேரத்தில் இந்த பங்களாவை தனக்கு அளிக்க வேண்டும் என, புதிதாக விமானப் போக்குவரத்து அமைச்சராக பதவியேற்ற ஜோதிராதித்யா சிந்தியா விண்ணப்பம் அளித்தார்.இவரது தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சருமான, காங்கிரசைச் சேர்ந்த மாதவ் ராவ் சிந்தியா இந்த பங்களாவில் தான் வசித்து வந்தார். அவரது மறைவுக்குப் பின் காங்கிரசில் இருக்கும் வரையில் இந்த பங்களாவில் தான் ஜோதிராதித்யா சிந்தியா வசித்து வந்தார்.
இந்த பாரம்பரிய 'சென்டிமென்ட்' காரணமாக 2019 தேர்தலில் காங்., சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பின்னும் வாடகை அடிப்படையில் இந்த பங்களாவிலேயே வசிக்க அனுமதிக்கும்படி கேட்டார். அப்போது அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
நோட்டீஸ்
இதன்பின் பா.ஜ.,வில் சேர்ந்து 2020ல் ராஜ்யசபா எம்.பி.,யானார். அப்போது முதல் இந்த பங்களா மீது கண் வைத்திருந்தார், சிந்தியா. ரமேஷ் பொக்ரியாலின் பதவி பறிபோனதும் தன் கோரிக்கையை தீவிரமாக்கினார்.உடல்நலப் பிரச்னை உட்பட பல காரணங்களைக் கூறி, காலி செய்யும் நடவடிக்கையை ரமேஷ் பொக்ரியால் தள்ளிப் போட்டார்.
இதையடுத்து மத்திய வீட்டு வசதி அமைச்சகம் சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு உரிய விளக்கமும் தராமல், போன் அழைப்புகளையும் தவிர்த்து வந்ததால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அமைச்சர் சிந்தியா, தான் விரும்பும் பாரம்பரிய பங்களா கிடைக்காமல் தவித்து வருகிறார்.