புதுடில்லி:''எல்லையில் தாக்குதல் நடத்தினால் உடனே பேச்சு நடத்தியது ஒரு காலம். ஆனால் தற்போது, 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' எனப்படும் துல்லிய தாக்குதல் போன்ற பதிலடியைக் கொடுப்போம்,'' என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, நம் அண்டை நாடான பாக்.,குக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் ஊரியில் 2016ல் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், நம் ராணுவ வீரர்கள் 19 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்தாண்டு செப்., 29ம் தேதி பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லைக்குள் நுழைந்த நம் விமானப் படை, சர்ஜிக்கல் ஸ்டிரைக்- எனப்படும் துல்லிய தாக்குதலை நடத்தியது. இதில் பாக்., பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன.
ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில நாட்களாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், கோவாவில் தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
முன்பெல்லாம் எல்லையில் ஏதாவது தாக்குதல் நடந்தால், உடனே அது குறித்து பேச்சு நடத்தப்படும். ஆனால், சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்று பதிலடியைக் கொடுப்போம் என்பதை நாம் உணர்த்தியுள்ளோம். நம் எல்லையில் பிரச்னை ஏற்படுத்த முயற்சித்தால், அதை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்.பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராணுவ அமைச்சராக இருந்த கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பரிக்கர் இந்த முக்கியமான, உறுதியான நடவடிக்கையை எடுத்தனர்.
பயங்கரவாதிகளுக்கு அவர்களுக்கு புரியும் மொழியில் பாடம் கற்றுத் தந்துள்ளோம். எல்லையில் மீண்டும் ஏதாவது தாக்குதல் நடந்தால், மேலும் பல சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துவதற்கு தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.
என்.எஸ்.ஜி., பாதுகாப்பு
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த வாரம் இறுதியில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். யூனியன் பிரதேசமான அந்தமான் நிக்கோபார் தீவுகளை நாலாபுறமும் கடல் சூழ்ந்திருப்பதால், அங்கு பாதுகாப்பு சவால்கள் அதிகம் இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதை கருத்தில் வைத்து அங்கு செல்லும் அமித் ஷாவுக்கு, என்.எஸ்.ஜி., எனப்படும் தேசிய பாதுகாப்புப் படையின் முழு பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமருக்கு மட்டுமே வழங்கப்படும் என்.எஸ்.ஜி., பாதுகாப்பு, அமித் ஷாவுக்கு முதன்முறையாக வழங்கப்பட உள்ளது.
Advertisement