தாவணகரே:''இனி விதான் சவுதாவுடன் அரசு நின்று விடாது. அரசே மக்களை தேடி வரும் என்பதை நிரூபித்து காட்டுவோம். ரேஷன் பொருட்கள் இனி, மக்கள் வீடு தேடி வரும்,'' என, முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
எடியூரப்பா முதல்வராக இருந்த போது, வாரந்தோறும் சனிக்கிழமைகளில் குக்கிராமங்களில் அமைச்சர்கள் தங்கி மக்களின் குறைகளை உடனடியாக தீர்க்கும் நிகழ்ச்சி கடந்தாண்டு கொண்டு வரப்பட்டது.கொரோனா இரண்டாம் அலை ஏற்பட்டதால், அந்நிகழ்ச்சி நடைபெறவில்லை. தற்போது வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மாவட்ட கலெக்டர்கள் குக்கிராமங்களில் தங்கும் நிகழ்ச்சி நடத்தப்படுமென, வருவாய்த் துறை அமைச்சர் அசோக் தெரிவித்திருந்தார்.
இதன்படி, முதல் நிகழ்ச்சியை தாவணகரே மாவட்டம், நியாமதி தாலுகா, சுரஹொன்னேஹள்ளி கிராமத்தில், முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று துவக்கி வைத்தார்.பின், அவர் பேசியதாவது: உணவுப் பொருட்களை ரேஷன் கடைகளுக்கு சென்று பெறுவதை நிறுத்தி, வீடு தேடி வழங்க ஏற்பாடு செய்யப்படும். இதற்கான ஆயத்தங்களை துரிதமாக செய்து வருகிறோம்.சமூக நல திட்டங்கள் வீடு தேடி வழங்கப்படும். அனைத்து விதமான சான்றிதழ்களும், கிராம பஞ்சாயத்து அலுவலகங்களிலேயே கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
மக்கள், அங்கும், இங்கும் அலையக் கூடாது என்பதே நோக்கம்.சோதனை முறையில் நவம்பர் 1 முதல் 'மக்கள் சேவகன்' என்ற திட்டம், மாநிலத்தின், 28 தொகுதிகளில் அறிமுகப்படுத்தப்படும். பின், 2022 ஜனவரி 26 லிருந்து மாநிலம் முழுதும் விஸ்தரிக்கப்படும்.துாய்மை, நேர்மை, மக்கள் நலன் கொண்ட ஆட்சி வழங்குவோம். அதன் பயனை மக்கள் பெற வேண்டும்.
நாள்தோறும் 20 மணி நேரமும் உழைப்பதற்கு தயாராக உள்ளேன். சிறந்த அமைச்சர்கள் உள்ளனர். இனி, அரசு விதான் சவுதாவோடு நின்று விடாது; மக்களைத் தேடி வருவோம் என்பதை நிரூபித்து காட்டுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.தாவணகெரே மாவட்ட கலெக்டர் மஹந்தேஷ் பீலகி, நேற்றிரவு சுரஹொன்னேஹள்ளி கிராமத்தில் தங்கினார்.
Advertisement