பெங்களூரு-சொத்து வாங்குவோர் நலனுக்காக, கர்நாடக ரியல் எஸ்டேட் கட்டுப்பாட்டு வாரியம், அடுக்குமாடி குடியிருப்புகள், வீட்டுமனைகளை விற்பதற்கு முன் குடிநீர் இணைப்பு விபரங்கள் தெரிவிப்பதை கட்டாயமாக்கியுள்ளது.
நாட்டில் அதிவேகமாக வளர்ந்து வரும் மெட்ரோ பாலிடன் நகரங்களில் பெங்களூரும் ஒன்றாகும். கல்வி, தகவல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகிறது.சர்வதேச நிறுவனங்கள் உள்ளன. சுகாதார சேவையும் தரமாக உள்ளது. பெங்களூரு நகரின் எல்லை, நாளுக்கு நாள் விரிவடைகிறது.குடிநீர், மின்சாரம் உட்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது.பெங்களூரு மாநகராட்சியின் 800 சதுர கி.மீ., பகுதியில் வசிக்கும், 1.30 கோடி மக்கள், குடிநீருக்காக காவிரி நீரையே நம்பியுள்ளனர்.காவிரி ஆற்றிலிருந்து 19 டி.எம்.சி., தண்ணீர் பெங்களூருக்காக பயன்படுத்தப்படுகிறது. குடிநீர் வாரியம், பல கட்டங்களில், திட்டங்களை செயல்படுத்துகிறது.ஆனால் நகரின் பல இடங்களில், குடிநீர் பிரச்னை உள்ளது.மாநகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட நகராட்சி, டவுன்சபை 225 சதுர கி.மீ., பரப்பளவுள்ள கிராமங்களை தவிர, 575 சதுர கி.மீ., பகுதிகளுக்கு, குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.பெங்களூருக்கு கூடுதலாக, 10 டி.எம்.சி., தண்ணீர் வழங்க அனுமதியளித்துள்ளது. எனவே காவிரி ஐந்தாம் கட்ட திட்டத்தை, குடிநீர் வாரியம் செயல்படுத்தியுள்ளது.மாநகராட்சி எல்லைப்பகுதியில் பலமாடி கட்டடங்களும், குடிநீர் தேவையும் அதிகரிக்கிறது. இதனால் நாள் தோறும் 650 மில்லியன் லிட்டர் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 2051ல் இந்த அளவு 2,650 மில்லியன் லிட்டராக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.தற்போது அடுக்குமாடி குடியிருப்புகள், வீட்டுமனைகளில் குடிநீர் இணைப்பு ஏற்படுத்தாமல் விற்று விடுவதால், இவற்றை வாங்குவோர் பாதிக்கப்படுகின்றனர்.எனவே அடுக்குமாடி குடியிருப்புகள், வீட்டுமனைகளை விற்பதற்கு முன், குடிநீர் இணைப்பு விபரங்கள் தெரிவிப்பதை கட்டாயமாக்கி, கர்நாடக ரியல் எஸ்டேட் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement