அண்ணன், தங்கை கிராமத்து மசாலாக் கலவை ‘உடன் பிறப்பே’ - திருவிழா திரைப்படம்.!

3 years ago 747

Udanpirappe-Movie-Review

சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, சூரி, ஷிஜா ரோஸ், ஆடுகளம் நரேன், கலையரசன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் சினிமா உடன் பிறப்பே. தற்போது அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் இந்த சினிமாவை சூர்யாவின் 2டி எண்டர்டயிண்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜோதிகாவின் 50வது சினிமாவான இதனை இயக்கி இருக்கிறார் இரா.சரவணன்.

புதுக்கோட்டை அருகே இருக்கும் சின்ன கிராமத்தில் வசிக்கும் அண்ணன், தங்கை. அவர்களைச் சுற்றியுள்ள உறவுகள் அவர்கள் தொடர்புடைய சம்பவங்கள் இவற்றின் தொகுப்பாக அமைந்திருக்கிறது உடன்பிறப்பே. படத்திற்கு நிறைய பெரிய நடிகர்கள் பங்களிப்பு செய்திருப்பது முதல் பலம். எப்போதும் கிராமத்து நாயகனாக அசத்தும் சசிகுமாருக்கு இந்த சினிமா இன்னுமொரு வெற்றிப் பக்கத்தை புரட்டியிருக்கிறது.

image

உண்மையான நட்பின் பங்காளிகளான சமுத்திரக்கனியும் சசிகுமாரும் இந்த சினிமாவில் மச்சான்களாக நடித்திருக்கின்றனர். முரட்டுத் தனமான சசிகுமார். சட்டம் தன் கடமையைச் செய்யும் என நம்பும் சமுத்திரக்கனி இவர்களுக்கு இடையே உறவு ஊசலாடும் ஜோதிகா. இந்த மூன்று புள்ளிகளை இயக்குநர் எப்படி சரியாக இணைத்திருக்கிறார் என்பது தான் முக்கியம். அந்த மேஜிக் சரியாக நிகழ்ந்திருந்தால் இந்த சினிமா இன்னுமொரு "கிழக்குச் சீமையிலே"வாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கிடைத்திருக்கும். துரதிஷ்டவசமாக இயக்குநர் இரா.சரவணனுக்கு திரைக்கதை கோர்வையும் திரைமொழியும் சுமாராகவே கைகூடியிருக்கிறது.

image

சூரியின் நகைச்சுவை ஆங்காங்கே வேலை செய்திருக்கிறது. சி சென்டர் ரசிகர்களை மனதில் வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த சினிமா திரையரங்கில் வெளியாகியிருந்தால் பட்டிதொட்டி எங்கும் ஒரு ரவுண்ட் வந்திருக்கும். அதற்கான அத்தனை விஷயங்களும் இந்த சினிமாவில் உள்ளன. ஊரில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் கலையரசன் அவருக்கு நிகழும் சோக முடிவு என்பதெல்லாம் கதைக்குத் தொடர்பில்லாத தனி ட்ராக்காக போய்க் கொண்டிருக்கிறதே தவிர உடன் பிறப்பே எனும் இந்த சினிமாவின் மையக் கதைக்கு அது அவசியமில்லை. அண்ணன் தங்கை பாசத்தைக் காட்டும் அடர்த்தியான காட்சிகள் இந்த சினிமாவில் இல்லை. அதே போல மச்சான்கள் இருவரும் பிரிந்து செல்லும் காட்சியும் மனதில் ஒட்டவில்லை. சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, ஷிஜா ரோஸ் என எல்லோருமே சிறப்பாக நடித்திருந்தாலும் கதை மற்றும் திரைமொழியின் பலவீணத்தால் இந்த சினிமா கொஞ்சம் தடுமாறி இருக்கிறது. சாப்பிடும் நேரத்தில் போலீஸ் வந்து கைது செய்யும் காட்சியில் சூரி நன்றாக நடித்திருக்கிறார்.

படத்தின் வேர்க் காட்சிகளில் ஒன்று சிறுவர்கள் இருவர் கிணற்றில் விழுவது. அந்த இரண்டு சிறுவர்களின் முகம் நன்றாக ரசிகர்களுக்கு பதிவாகும் படியான காட்சிகள் அவசியம் இருந்திருக்க வேண்டும். அப்படி அமைத்திருந்தால் மட்டுமே பின் நிகழும் துன்பம் மனதில் ஒட்டும். அது நடக்கவில்லை. இப்படியான சின்னச் சின்ன விசயங்களைத்தான் திரைமொழி என்கிறோம்.

image

வேல்ராஜின் ஒளிப்பதிவும் ரூபனின் படத்தொகுப்பும் நன்று. இமானின் இசை கொஞ்சம் டிவி சீரியல் பாணியில் அமைந்து விட்டது. டைட்டிலில் வரும் அண்ணன் பாடல் நன்றாக அமைந்திருக்கிறது. இடைவேளைக்குப் பிறகு பல இடங்களில் அண்ணன் பாடலை சொறுகியிருப்பதை படத்தொகுப்பாளரும், இசையமைப்பாளரும் தவிர்த்திருக்கலாம்.

இவை எல்லாம் ஒரு புறமிருந்தாலும். இந்த பண்டிகை நாளில் நல்ல கிராமத்து விருந்தாகவும், ஆழ்துளைக் கிணறு குறித்த ஒரு நினைவூட்டல் சினிமாவாகவும், நல்ல பொழுதுபோக்கு சினிமாவாகவும் உடன்பிறப்பே அமைந்திருக்கிறது. குடும்பத்துடன் பார்க்கலாம்.

Read Entire Article