போஸ்டன்:இந்தியா சிறந்த வாங்கும் திறன் கொண்ட நாடாக இருக்கிறது. மேலும், இந்தியாவின் மத்திய தர வர்க்கத்தினரிடம் பொருட்களை வாங்குவதற்கான பணம் இருக்கிறது என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மேலும் இந்தியா, நடப்பு ஆண்டில் இரட்டை இலக்க வளர்ச்சியை நெருங்கும் என்றும்; இந்தியா தான் உலகிலேயே அதிக வளர்ச்சி கொண்ட நாடாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா சென்றிருக்கும் நிர்மலா சீதாராமன், அங்கு ‘மொசாவர் – ரஹ்மானி’ மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், ஹார்வர்டு பல்கலை பேராசிரியர் லாரன்ஸ் சம்மர்ஸ் உடனான உரையாடலின் போது இவ்வாறு கூறியுள்ளார்.மேலும் அவர் கூறியதாவது:அடுத்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 –- 8.5 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இது அடுத்த ௧௦ ஆண்டுகளுக்கு நீடிக்கும்.
நடப்பு ஆண்டில் இரட்டை இலக்கத்துக்கு நெருக்கமான வளர்ச்சியை அடையும். நிதியமைச்சகம், வளர்ச்சி குறித்த எந்த கணிப்பையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. என்றாலும், உலக வங்கி, பன்னாட்டு நிதியம் மற்றும் மதிப்பீட்டு அமைப்புகள் அனைத்தும், நான் குறிப்பிட்ட இந்த வளர்ச்சி வீதத்தை தான் தெரிவிக்கின்றன.
சிறந்த வாங்கும் திறன் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. நாட்டின் மத்திய தர வர்க்கத்தினரிடம் பொருட்களை வாங்குவதற்கான பணம் இருக்கிறது. பிற இடங்களிலிருந்து வரும் மக்களுக்கு இந்தியாவில் முதலீடு செய்வதற்கும், உற்பத்தி செய்வதற்கும் ஏற்ற சந்தை இருக்கிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.