திருவள்ளூர்: 2வது தவணை செலுத்திக்கொண்ட 9 மாத கர்ப்பிணி திடீர் மூச்சுத்திணறலால் உயிரிழப்பு

3 years ago 337

A-pregnant-woman-who-took-2nd-dose-covid-vaccine-died-due-to-sudden-suffocation-in-Thiruvallur

திருவள்ளூர் அருகே 2-வது தவணை கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட 9 மாத கர்ப்பிணிப் பெண் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பிணியின் உயிரிழப்புக்கு உண்மையான காரணத்தை தெரிவிக்கும் வரை உடலை வாங்கப் போவதில்லை எனக்கூறி மாவட்ட வருவாய் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த புதூர் மேடு காலனி பகுதியில் வசித்து வருபவர் நந்தகுமார். அவரது மனைவி லாவண்யா (வயது 25). இவர்கள் இருவரும் ஸ்ரீபெரும்புதூர் தனியார் கம்பெனியில் தொழிலாளர்களாக பணி புரிந்தவர்கள். கடந்த ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். லாவண்யா 9 மாத நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். கர்ப்பமாக இருந்த லாவண்யாவுக்கு நாளை (30.09.2021) சீமந்தம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று மாலை புதூர் கிராமத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளார் லாவண்யா. தடுப்பூசி போட்டுக்கொண்டு வீடுசென்ற அவருக்கு, நேற்று நள்ளிரவு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக உறவினர்கள் அவரை அருகிலுள்ள பட்டரைபெரும்புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.

image

கர்ப்பிணிப் பெண்ணான லாவண்யாவுக்கு மேலும் ஒரு ஊசி போட்டுவிட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தினர், பின் அவரை வீட்டுக்கு அழைத்துப்போக சொல்லியுள்ளனர். வீட்டிற்கு திரும்பிய லாவண்யாவுக்கு, சிறிது நேரத்தில் மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பயந்து போன அனைவரும், லாவண்யாவை பட்டரைப் பெரும்புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சென்ற விசாரித்த போது, திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். உடனடியாக லாவண்யா அங்கும் அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ‘வரும் வழியிலேயே லாவண்யா இறந்துவிட்டார்’ என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி: நடிகர் விவேக் மரணம்: 8 வாரங்களில் அறிக்கை அளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடிதம்

9 மாத கர்ப்பிணியாக இருந்த லாவண்யாவிற்கு 2-வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் தான் அவர் உயிரிழந்ததாகவும், லாவண்யாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் லாவண்யாவின் தந்தை விஜயகுமார் கனகம்மாசத்திரம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை மேற்கொண்ட நிலையில், ‘லாவண்யாவின் மரணம் குறி்த்த உண்மையான பதிலை தராவிட்டால் உடலை வாங்க மாட்டோம்’ என அவரின் உறவினர்கள் மாவட்ட வருவாய் அலுவலகத்தை முற்றுகையிட்டு தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பாக காணப்படுகிறது.

Read Entire Article