மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் எலும்பு வங்கி தொடக்கம்... சிறப்பம்சங்கள் என்ன?

3 years ago 872

தென் தமிழகத்தில் முதன்முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் எலும்பு வங்கி அமைக்கப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் போக்குவரத்து நெரிசல் மிக்க யுகத்தில், வாகன விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. விபத்துக்களால் பாதிக்கப்படும் நபர்களை காப்பாற்ற பல்வேறு உயர் சிகிச்சை வசதிகள் உபயோகப்படுத்தப்பட்டு வந்தாலும், சிலர் உடல் உறுப்புகளை இழப்பது தவிர்க்க முடியாததாக உள்ளன.

தொடர்புடைய செய்தி: தென் மாவட்டங்களுக்கான முதல் எலும்பு வங்கியை பெறுகிறது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை

image

இதைதடுக்க, எலும்பு முறிவுகள் தடுக்கப்பட வேண்டிய சூழல் உள்ளது. இதைக் கருத்தில்கொண்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் ‘விபத்து மற்றும் தீவிர சிகிச்சை’ வளாகத்தில் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் எலும்பு வங்கி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. விபத்துக்களில் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனைகளுக்கு வரும் நபர்களுக்கு ரத்த வங்கி ஒரு பெருங்கொடையாக இருப்பதுபோல, இந்த எலும்பு வங்கியும் இருக்குமென மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தென் தமிழகத்தில் முதன் முறையாக ராஜாஜி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள இந்த வங்கியை நேற்று (21.12.21) காலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

image

இந்த வங்கியின் மூலம் எலும்பு தொடர்பான சிகிச்சைகளுக்கு வருவோருக்கு, உடனடியாக எலும்புகளை பயன்படுத்தி உறுப்புகளை காப்பாற்றலாம். இதற்கு தேவையான எலும்புகளை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்வோர், உறுப்புகளை பொறுத்த முடியாத நிலையில் உயிருடன் இருக்கும் நபர்களிடம் இருந்தோ அல்லது இறந்த நபர்களிடம் இருந்து 12 முதல் 24 மணி நேரத்திற்குள் தேவையான எலும்புகள் உறவினர்களின் ஒப்புதல்களுடன் எடுக்கப்படும்.

இந்த எலும்பு வங்கி குறித்து, முடநீக்கியல் துறை தலைவர் மருத்துவர் அரிவாசன் நம்மிடையே பேசுகையில், “எலும்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ளும் போது நோய்த்தொற்று ஏதாவது ஏற்பட்டுள்ளதா என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே சிகிச்சை நடைபெறும். இந்த வங்கியில் உள்ள பதப்படுத்தும் இயந்திரங்கள் மூலமாக தேவையின் அடிப்படையில் 5 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை எலும்புகளை பத்திரப்படுத்தி வைக்க முடியும். எலும்பு திசுக்கள் 80 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாக்கப்படுகின்றன. கிருமி நீக்கம் செய்வதற்காக 10 முதல் 25 கிலோ கிரே காமா கதிர்வீச்சுக்கு உட்படுத்தப்படுகின்றன” என்றார்.

image

தொடர்ந்து சுகாதாரத்துறை தரப்பில், “முதுகெலும்பு இணைப்பு அறுவை சிகிச்சைகள், தசைநார் புனரமைப்பு சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு இந்த வங்கி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். இந்த வங்கியின் மூலமாக அறுவை சிகிச்சைக்கான செலவும், நேரமும் குறைவதால் இது ஏழை நோயாளிகளுக்கும், தென் தமிழக மக்களுக்கும் வரப்பிரசாதமாக அமையும்” என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணேஷ்குமார்

Read Entire Article