வர்த்தக துளிகள்

3 years ago 843

சீனாவின் ஏற்றுமதி குறைந்தது

சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, செப்டம்பர் மாதத்தில், முந்தைய ஆகஸ்ட் மாதத்தை விட குறைந்துள்ளது. கடந்த ஆகஸ்டில் 33 சதவீதம் அளவுக்கு ஏற்றுமதி அதிகரித்திருந்த நிலையில், செப்டம்பரில் 28.1 சதவீதம் அளவுக்கே அதிகரித்து உள்ளது.மீண்டும் கொரோனா பரவல், கப்பல் தடைகள் மற்றும் பிற இடையூறுகளால், செப்டம்பர் மாதத்தில், சீனாவின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பன்னாட்டு நிதியம் பாராட்டு

இந்திய பொருளாதாரம், நடப்பு ஆண்டில் 9.5 சதவீத வளர்ச்சி பெறும் என, பன்னாட்டு நிதியம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி 8.5 சதவீதமாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.அத்துடன், அடுத்த 2022ம் ஆண்டில், உலக அளவில் மிக வேகமான பொருளாதார வளர்ச்சியை அடையும் நாடாக இந்தியா இருக்கும் என்றும், பன்னாட்டு நிதியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழை நாடுகளின் கடன்

கொரோனா பாதிப்புகள் காரணமாக, குறைந்த வருவாய் கொண்ட ஏழை நாடுகளின் கடன், கடந்த ஆண்டில் 12 சதவீதம் அதிகரித்து, 64.50 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, உலக வங்கி தெரிவித்துள்ளது.மேலும், நிலைமை மோசமாக இருப்பதால் உடனடியாக இந்த ஆண்டுக்குள்ளாக கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், உலக வங்கி வலியுறுத்தி உள்ளது.

‘கரூர் வைஸ்யா’வுக்கு அனுமதி

கரூர் வைஸ்யா வங்கிக்கு, மத்திய நேரடி வரிகள் வாரியம் சார்பில், நேரடி வரிகளை வசூலிக்க, ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.இதைத் தொடர்ந்து வரிகளை வசூலிக்க, மத்திய நேரடி வரிகள் வாரியத்துடன் ஒருங்கிணைப்புக்கான பணிகளை கரூர் வைஸ்யா வங்கி துவங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒருங்கிணைப்பு பூர்த்தியானதும் வாடிக்கையாளர்கள் வங்கி கிளைகள் அல்லது செயலி வாயிலாக வரி செலுத்தலாம்.

Read Entire Article